மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

ஜல்லிக்கட்டு: தீவிரமாகும் போராட்டங்கள்!

ஜல்லிக்கட்டு: தீவிரமாகும் போராட்டங்கள்!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிகோரி மாணவர்களும், இளைஞர்களும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மதுரையில் இன்று கடைகளை அடைத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தென் தமிழகத்தை பொருத்தவரை அதிலும் குறிப்பாக மதுரை , சிவகங்கை மற்றும் காரைக்குடி பகுதியைப் பொருத்தவரை ஜல்லிக்கட்டு என்பது வாழ்வோடு இரண்டரக் கலந்த ஒன்று. ஆனால், இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகையில் ஜல்லிக்கட்டு நடப்பதற்கான சாத்தியக் கூறுகள் அருகி வருகிறது. இந்நிலையில்தான் மதுரையைச் சுற்றியுள்ள 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் போராட்டத்தை கையில் எடுத்துள்ளார்கள். ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். பொங்கல் திருநாளுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான எந்த முயற்சிகளையும் மத்திய அரசு செய்யவில்லை. மேலும், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் தீர்ப்பு வந்த பிறகுதான் முடிவெடுக்க முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்த நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள வெள்ளலூர் மற்றும் அதனைச் சுற்றி இருக்கின்ற 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் அந்தந்த ஊர் கடைகளை அடைத்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். வெள்ளலூர், கோட்டநத்தம் பட்டி, உறங்கான்பட்டி உள்ளிட்ட 60 கிராமங்களைத் சேர்ந்தத் தலைவர்களே தன்னெழுச்சியாக இந்தப் போராட்டத்தை வழிநடத்திச் செல்கின்றனர். 60 கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளலூர் என்றப் பகுதியில் ஒன்று கூடி மேலூரில் உள்ள பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என தன்னெழுச்சியாக ஒன்றிணைந்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சென்னையிலும் அண்ணா பல்கலை கழகம் முன்பும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு எதிராக உள்ள தடையை கண்டித்தும், பீட்டா அமைப்பை எதிர்த்தும் போராட்டத்தில் குரல் கொடுத்துள்ளனர். அதேபோல் தரமணி எம்.ஜி.ஆர் ரோட்டிலும் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக போராட்டம் நடத்தி வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

கோவையிலும் ரேஸ்கோர்ஸ் என்ற இடத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எந்த அரசியல் கட்சி ஆதரவுமின்றி ஜல்லிக்கட்டு நடத்த போராடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தொடர்ந்த போராட்டம் கரூர், மதுரை, நெல்லை சேலம், புதுச்சேரி, தூத்துக்குடி என பல்வேறு பகுகளிலும் ஜல்லிக்கட்டு நடத்தக் கோரி போரட்டம் வெடித்து வருகிறது. அதையடுத்து இன்று மாலை கரூரில் தடைகளைத் தகர்த்து உரிய அனுமதியுடன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு பேரணி நடத்தவுள்ளதாக முகநூலில் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். கரூர் 80 அடி ரோடு பகுதியில் காளையுடன் சென்று போராட்டம் நடத்தவுள்ளதாக கூறியுள்ளனர். இதில் பல்வேறு கட்சியினரும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது.

மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று காலை முதலே திரண்ட மாணவர்கள் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு பேரணி நீண்டது. இதனால் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. ஜல்லிக்கட்டு வேண்டும் ஜல்லிக்கட்டு எங்களின் உரிமை. மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். பீட்டா அமைப்பு இதில் தலையிடக்கூடாது என்றும் பேரணியாக சென்ற மாணவர்கள் கோஷமிட்டனர். தமிழர்களின் வீர விளையாட்டை அழிக்க நினைப்பதா என்றும் கேள்வி எழுப்பினர். “ பொங்கல் பண்டிக்கை இன்னும் சில நாட்கள் வர இருக்கிறது. ஆனால் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை. ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் . இல்லையென்றால் நாங்களே ஜல்லிக்கட்டை நடத்துவோம்” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon