மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

வறட்சி நிவாரணம் போதாது : தலைவர்கள் கருத்து !

வறட்சி நிவாரணம் போதாது : தலைவர்கள் கருத்து !

தமிழகத்தை வறட்சி மாநிலமாக முதல்மைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்தார். மேலும் பதினைந்து விதமான வறட்சி நிவாரணங்களை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் “இந்த நிவாரணங்கள் கடலில் கரைத்த பெருங்காயம் போல் உள்ளது. இந்த நிவாரணம் போதாது என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துக் கூறியிருக்கிறார்கள்”. அந்தக் கருத்துக்கள் இதோ :

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:

தமிழக அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்ற போதிலும், பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணம் போதுமானதாக இல்லை. வறட்சி நிவாரணப் பணிகள் மற்றும் நிவாரண உதவிகளுக்காக மத்திய அரசின் நிதி வரும் வரை காத்திருக்காமல் நிவாரண உதவிகள் மற்றும் பணிகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும். முதல்–அமைச்சரின் இந்த அறிவிப்பு மட்டுமே உழவர்கள் தற்கொலைகளையும், அதிர்ச்சி சாவுகளையும் தடுத்து விடாது. அரசின் உதவிகளும், இழப்பீடும் உடனடியாக வழங்கப்பட்டால் தான் தற்கொலை மற்றும் அதிர்ச்சி சாவுகளில் இருந்து உழவர்களை காப்பாற்ற முடியும். இதை உணர்ந்து உணவு தரும் கடவுள்களான உழவர்களை காப்பாற்றுவதற்கான உதவிகளை அரசு உடனடியாக வழங்க வேண்டும்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:

விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு நிவாரணம் குறித்து எந்தவித அறிவிப்பும் இல்லாதது கவலை அளிக்கிறது. கால்நடைகளுக்கு ஒதுக்கிய 78 கோடி ரூபாய் போதுமானதல்ல. கூடுதலான தொகை வழங்கிட வேண்டும். தமிழக விவசாயிகளின் நஷ்டத்தை ஈடு செய்யக்கூடிய அளவிற்கு நிவாரணம் கொடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. அதற்காக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. எனவே, மத்திய, மாநில அரசுகள் தமிழக விவசாயிகளுக்கு போதுமான அளவுக்கு நிவாரணமும், சலுகைகளும் வழங்கி, விவசாயிகள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:

தமிழக முதல்–அமைச்சர் அறிவித்துள்ள வறட்சி நிவாரண உதவிகள் ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. குறிப்பாக, மகசூல் அழிந்துள்ள நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.5,465, மானாவாரி பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம், நீண்டகால பயிருக்கு ஏக்கருக்கு ரூ.7,287 என்பது விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுசெய்ய உதவாது. விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்கு மாறாக மத்திய கால கடனாக மாற்றியிருப்பது விவசாயிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வறட்சி நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க முன்வருமாறு தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன்:

பயிர் இழப்பீட்டிற்கு அரசு அறிவித்துள்ள இழப்பீட்டு தொகை மிகவும் குறைவானதாக உள்ளது. 33 சதவீதம் பயிரை இழந்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ.5,465 என அரசு அறிவித்திருப்பது விவசாயிகளை ஏமாற்றும் வேலையாகும். அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை தமிழக விவசாயிகளின் கண்ணீரை துடைக்க உதவாமல் வெறும் கண்துடைப்பு நாடகமாகவே அமையும்.

இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பாரிவேந்தர்:

வறட்சி பாதித்த பகுதிகளை கணக்கெடுத்து அதன் அடிப்படையில் நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.5,465 எனவும், மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் எனவும் இழப்பீடு வழங்கப்படும் என்ற அறிவிப்பு போதுமானதாக இல்லை. இதனை மேலும் உயர்த்தி தர வேண்டும்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் வே.துரை மாணிக்கம்:

சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களை வறட்சியால் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. விவசாயிகள் பெற்றுள்ள குறுகிய கடன்களை, மத்திய காலக்கடனாக மாற்றப்படும் என்பது பாதுகாப்பானதல்ல. அவர்கள் பெற்றுள்ள அனைத்துப் பயிர்க் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மிகக் குறைந்த அளவான நிலவரியை மட்டும் தள்ளுபடி செய்வது ஏமாற்றமளிக்கிறது. ஆகவே, இந்த அறிவிப்புகளை மறுபரிசீலனை செய்து மத்திய அரசிடம் போதிய நிதியைப் பெற்று உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon