மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

ஒன்றாக எழுவோம், ஒன்றாக வீழ்வோம்: அதிபராக ஓபாமா இறுதி உரை!

ஒன்றாக எழுவோம், ஒன்றாக வீழ்வோம்: அதிபராக ஓபாமா இறுதி உரை!

தன் எட்டு வருட ஆட்சி காலத்தில் தான் செய்த சத்தியங்கள், தான் கண்ட வெற்றிகளுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் என அனைவரையும் நெகிழ்ந்து பாராட்டி, அமெரிக்க அதிபராக தன் இறுதி உரையை ஆற்றி, விடைபெற்றிருக்கிறார் ஒபாமா. பெரும்பாலான அமெரிக்கர்கள் எதிர்பார்த்திராத தலைமை மாற்றம் ஏற்படும் இக்காலத்தில், ஒபாமாவின் உரை, உணர்ச்சிகரமானதாக இருந்தது.

அமெரிக்கா மீது தனக்கு இருக்கும் நம்பிக்கை உறுதியாகியிருக்கிறது என அவர் பிறந்த சிகாகோவில் பேசிய ஒபாமா, “எதிர்காலம் நமதாக இருக்க வேண்டும்” என அறிவித்திருக்கிறார். மிக வலுவாக உரையை தொடங்கிய ஒபாமா, முடிவை நோக்கி நகரும் போது, கண் கலங்கினார்.

இன்னும் பத்து நாட்களில் பதவியேற்கவிருக்கும் குடியரசு கட்சியின் டோனால்ட் ட்ரம்ப் குறித்து ஒரு வார்த்தையையும் ஓபாமா பேசவில்லை என்றாலும், ஆட்சி மாற்றம் குறித்து அவர் பேசிய போது, கூடியிருந்த மக்கள் ட்ரம்பை எதிர்த்து கூச்சலிட தொடங்கினர். உடனே, ஓபாமா, “ இல்லை.. அமெரிக்காவின் மிகப்பெரிய பலம், ஒரு அதிபரிடம் இருந்து மற்றவருக்கு அதிகாரம் சமாதானமாக மாறுவது தான்” என கூட்டத்தை கட்டுப்படுத்தினார்.

தன் ஆட்சி காலத்தில் சாதித்தவைகள் குறித்துப் பேசிய ஒபாமா, நவம்பர் எட்டாம் தேதி தேர்தல் முடிவு ஏற்படுத்திய கலக்கத்தில் துவண்டிருக்கும் அமெரிக்க மக்களை உற்சாகப்படுத்த தன் உரையை பயன்படுத்த முயன்றார். “எழுந்தால் ஒன்றாக எழுவோம், வீழ்ந்தால் ஒன்றாக வீழ்வோம்” என பாகுபாடுகளை உடைத்தெறிய மக்களை ஊக்குவித்தார். மக்களின் பெருங்கூட்டம், “இன்னும் நான்கு வருடங்கள்” என கோஷமிட்ட போது,மெலிதாக புன்னகைத்த ஒபாமா, “என்னால் அதை செய்ய முடியாதே” என பதிலளித்து, விடை பெற்றார்.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon