மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 6 அக் 2017

பொடி வகைகள் - கிச்சன் கீர்த்தனா

பொடி வகைகள் - கிச்சன் கீர்த்தனா

பேசும்போதே பொடிவைத்து பேசுவார்கள். ஆனால், பற்பல அடிகள், அனுபவங்கள் பெற்றவர்கள் இதைக் கண்டுபிடித்துவிடுவார்கள். அப்படி இருப்பவர்களை இந்த சமூகம் விரும்புவதும் இல்லை. இதுவே சாப்பிடும்போது விதவிதமாக பொடி வைத்து அசத்தினால் நம்மை தலையில் வைத்து கொண்டாடுவார்கள். சரி. எத்தனையோ பொடிவகைகள் இருப்பினும் சிலவற்றை இன்று காண்போம். (ஏன்னா இன்னிக்கு இதுதான் செஞ்சேன். மற்ற பொடியெல்லாம் அடுத்த வாரம்தான் செய்யணும். அப்போ மறக்காம உங்களுக்கும் சொல்றேன்.)

கொள்ளுப்பொடி

தேவையானவை: கொள்ளு – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 6, உளுத்தம்பருப்பு – 100 கிராம், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வெறும் வாணலியில் கொள்ளு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுக்கவும். இவற்றுடன் தேவையான உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.

குறிப்பு: கொள்ளு, கொழுப்புச்சத்தைக் குறைக்கும்.

தேங்காய்ப் பொடி

தேவையானவை: தேங்காய் துருவல் - 1 கப், உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன், கடலை பருப்பு - 1 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 10, பெருங்காயம் – சிறிது, எண்ணெய் - அரை டீஸ்பூன், புளி - கோலிகுண்டு அளவு.

செய்முறை: தேங்காய் துருவலை நல்ல சிவப்பாக வறட்டு வாணலியில் கருகாமல் வறுக்கவும். புளியைச் சின்ன சின்ன துண்டுகளாக பிரித்து நன்றாக கரகரப்பாக வறுக்கவும். பிறகு எண்ணெய் விட்டு மற்ற பொருள்களை வறுக்கவும். ஆறினதும் மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும். பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். தேவையான போது, சூடு சாதத்தில் நெய்விட்டு இந்தப் பொடி போட்டு பிசைந்து சாப்பிடவும். தொட்டுக்கொள்ள அப்பளம் / சாம்பார் அல்லது கெட்டித் தயிர் சுவையாக இருக்கும்.

பருப்பு பொடி

தேவையானவை: துவரம்பருப்பு - ஒரு கப், கடலைப்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் – 2, மிளகு - 2 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தேவையானவற்றை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். துவரம்பருப்பு மற்றும் கடலைப்பருப்பை வெறும் வாணலியில் எண்ணெயில்லாமல் சிவக்க வறுக்கவும். பாதி வறுக்கும்போதே மிளகு, காய்ந்த மிளகாயையும் சேர்த்துக் கொள்ளவும். இறக்கி ஆறியதும் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாகப் பொடி செய்யவும். ரொம்ப நைஸாக இருக்கக் கூடாது. சாதத்தில் நல்லெண்ணெயோ, நெய்யோ சேர்த்து இந்த பருப்புப் பொடி போட்டு கலந்து மோர்க் குழம்பு, அப்பளத்துடன் சாப்பிடவும்.

இட்லி பொடி

தேவையானவை: உளுத்தம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 100 கிராம், காய்ந்த மிளகாய் - 50 கிராம், வெள்ளை எள் - 50 கிராம், பெருங்காயம் – சிறிதளவு, உப்பு -தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக் கொள்ளவும். இம்மூன்றையும் தனித்தனியாக அரைத்து, பின்னர் உப்பு, பெருங்காயம் சேர்த்து கிளறி விட வேண்டும். காற்று புகாத பாட்டிலிலோ, பாத்திரத்திலோ போட்டு வைக்கவும்.

குறிப்பு: தேவைப்பட்டவர்கள் தட்டி காயவைத்த பூண்டை அரைத்தும் சேர்த்துக் கொள்ளலாம்.

கீர்த்தனா சிந்தனை

எந்தப் பொடியை வேண்டுமானாலும் இட்லிக்குத் தொட்டுச் சாப்பிடலாம். ஆனால், மூக்குப்பொடியைத் தொட்டு சாப்பிட முடியாது.

பூண்டு பொடி, பூண்டில் செய்யலாம். ஆனால், இட்லி பொடி இட்லியில் செய்ய முடியாது.

என்னதான்... சரி வேணாம் விடுங்க, நாளை சந்திப்போம்

கிச்சன் கீர்த்தனா 01

கிச்சன் கீர்த்தனா 02

கிச்சன் கீர்த்தனா 03

கிச்சன் கீர்த்தனா 04

கிச்சன் கீர்த்தனா 05

வெள்ளி, 6 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon