மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 3 அக் 2017

கேரட் ஜூஸ்: கிச்சன் கீர்த்தனா 03

கேரட் ஜூஸ்: கிச்சன் கீர்த்தனா  03

‘இன்றைக்கு என்ன ஸ்பெஷல் கீர்த்தனா?’ என்று கேட்டவர்களிடம், ஒரு ஜூஸைக் கொடுத்தேன். என்னவென்று கேட்டார்கள். குடித்துப்பார்த்து கண்டுபிடியுங்கள் என்றேன். சாப்பிட்ட பிறகு ‘கேரட் ஜூஸ்’ என்று கூறி பாதியிலேயே வைத்துவிட்டனர். அதில் இன்னொன்றும் சேர்க்கப்பட்டுள்ளது என்னவென்று கண்டுபிடியுங்கள் என்ற பின்னரே முழுவதுமாக குடித்து, அதில் ஒருவர் “இஞ்சி’ என கூறினர்.

ஆம். கேரட் ஜூஸ் உடன் இஞ்சியைச் சேர்த்து பருகுவதால் எவ்வளவு நன்மைகள் இருக்கின்றன எனத் தொடர்ந்தேன்.

பார்வை மேம்படும்:

கண் பிரச்னை இருந்தால், கேரட் ஜூஸில் இஞ்சி சாறு கலந்து குடியுங்கள். இதனால் அந்த பானம் கண்களில் உள்ள நரம்புகளுக்கு ஊட்டமளித்து, வலிமைப்படுத்தி, பார்வையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

புற்றுநோய் தடுக்கப்படும்:

கேரட் - இஞ்சி ஜூஸில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் உள்ளன. இவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, அபாயகரமான புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்

நோய்த்தொற்றுகளைத் தடுக்கும்:

கேரட் மற்றும் இஞ்சியில், ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை அழித்து, நோய்களிடமிருந்து பாதுகாத்து, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

குமட்டல் குறையும்:

இந்த இயற்கை பானம், வயிற்றில் உள்ள அமிலத்தை நிலைப்படுத்தி, குமட்டல் மற்றும் வாந்தி உணர்வைக் குறைக்கும்.

தசை புண்கள்:

கேரட் மற்றும் இஞ்சியில் நோய் எதிர்ப்பு அழற்சி பண்புகள் ஏராளமாக உள்ளன. இவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரித்துக் குடித்தால், தசைகளில் இருக்கும் உட்காயங்கள் மற்றும் அதனால் ஏற்படும் வலிகள் குறையும்.

இதயநோய்கள்:

கேரட் மற்றும் இஞ்சி ஜூஸ் இதயத்தில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து, இதயநோய்கள் வராமல் தடுக்கும்.

வாய் ஆரோக்கியம்:

கேரட் - இஞ்சி ஜூஸ், ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும். மேலும், இது வாயில் எச்சிலின் உற்பத்தியைத் தூண்டி, வாய் வறட்சியடைவதைத் தடுத்து, வாய் துர்நாற்றம் ஏற்படாமலும் பார்த்துக் கொள்ளும்.

ஜூஸ் செய்ய தேவையான பொருள்கள்:

கேரட் - 1 (துண்டுகளாக்கப்பட்டது)

இஞ்சி - சிறிது (துருவியது)

தண்ணீர் - தேவையான அளவு

சர்க்கரை – (தேவைப்பட்டால்)

ஆரஞ்சு ஜூஸ் - சிறிது (விருப்பமிருந்தால்)

செய்முறை:

மிக்ஸியில் துண்டுகளாக்கப்பட்ட கேரட், துருவிய இஞ்சி மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி, தேவையான அளவு சர்க்கரை சேர்த்தால், ஜூஸ் ரெடி!

கீர்த்தனா காமெடி:

தற்காலத்தில் உணவைச் சாப்பிட தேவையான பொருள்கள் :

சாப்பாடு, தட்டு, டம்ளர், கரண்டி, தண்ணீர் மற்றும் “டீவி ரிமோட்”.

கிச்சன் கீர்த்தனா 01

கிச்சன் கீர்த்தனா 02

செவ்வாய், 3 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon