மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 2 அக் 2017

பாகற்காய் பச்சடி: கிச்சன் கீர்த்தனா 02

பாகற்காய் பச்சடி: கிச்சன் கீர்த்தனா 02

“என்னம்மா இது பாயசத்துல பூண்டு மிதக்குது.”

“அட என்னங்க நீங்க... இப்ப இதான் ட்ரண்டே... வெவரம் தெரியாம இருக்கீங்களே... பேசாம சாப்பிடுங்க. கொஞ்சம் அப்டேட்டா இருக்கவிட மாட்டீங்களே...”

என்று சொல்வது நமக்கே சற்று வித்தியாசமாகத் தெரியலாம். ஆனால், ‘சமைக்கும்போது தவறி விழுந்த பூண்டை சரிகட்ட ஏற்படுத்திய சமாளிஃபிகேஷன்தான் இது’ என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். இந்த கீர்த்தனாவின் வாழ்க்கையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது. (ஏன் இதுவாகக்கூட இருக்கலாம். இந்த விஷயம் நமக்குள்ளாகவே இருக்கட்டும்) கசப்பான விஷயங்களைக்கூட கலகலப்பு கலந்து கூறினால் எளிதில் மனதில் சென்றடையும். சமையலிலும் அவ்வாறே. பாகற்காய் சமைத்தாலே பத்து கிலோமீட்டர் தள்ளிப்போய் நிற்பார்கள். அதன் மகத்துவமும் மருத்துவமும் வாழைப்பழ ஊசி யைப்போல அவ்வப்போது தெரியப்படுத்திட வேண்டும். அதுபோன்ற ஒன்றே இந்த பாகற்காய் பச்சடி.

தேவையானவை:

பாகற்காய் - அரை கிலோ

வெல்லம் - 100 கிராம்

புளி - சிறிய எலுமிச்சை அளவு

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

தனியாத்தூள் - 1 தேக்கரண்டி

தாளிக்க:

கடுகு - 1 தேக்கரண்டி

உளுத்தம்பருப்பு - அரை தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

நல்லெண்ணெய் - 2 தேக்கரண்டி

செய்முறை:

• பாகற்காயை விதை நீக்கி பொடியாக நறுக்கி வைக்கவும்.

• வெல்லத்தைத் தூளாக்கி வைக்கவும்.

• புளியை 200 மி.லி நீரில் கரைத்து வைக்கவும்.

• ஒரு பாத்திரத்தில் புளி கரைசலை ஊற்றி, பாகற்காயைக் கொட்டி வேக வைக்கவும்.

• வெந்து வரும்போது மிளகாய்த்தூள், தனியாத்தூள், வெல்லத்தை கலந்து நன்கு கெட்டியாகும் வரை கிளறவும்.

• கடைசியாகத் தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைச் சேர்த்து தாளித்து பாகற்காய் பச்சடியில் சேர்க்கவும்.

• இந்தப் பச்சடியில் இனிப்பு, புளிப்பு, கசப்பு என பல சுவைகள் கலந்து இருக்கும். குழந்தைகள் இதைச் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள பூச்சிகள் நீங்கும்.

கீர்த்தனா குரல்(ள்) :

காய்களுள் காய் பாகற்காய் அக்காயே

கசப்பினில் எல்லாம் தலை.

கிச்சன் கீர்த்தனா 01

திங்கள், 2 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon