மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 6 செப் 2017

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 24 - தமயந்தி

சிறப்புக் கட்டுரை: வல்லமை தாராயோ - 24 - தமயந்தி

மறுபடியும் அடிமைச் சமூகத்தை உருவாக்கும் முயற்சி

அனிதாவின் தற்கொலை தமிழகம் எதிர்பாராதது. அதுவரை நீட் பரீட்சைக்கு எதிரான விவாதங்கள்தான் தமிழகம் அறிந்திருந்தது. நியூஸ் 18 செய்தி ஆசிரியர் குணசேகரன் மட்டுமே அனிதா பற்றி அழுத்தம் கொடுத்து செய்தி வெளியிட்டிருந்தார். ‘நீட்டின் அநியாயங்களில் ஒன்று ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கு அது அளிக்கவிருக்கும் அநீதி என்பது போக, அரசாங்கம் தனது மாநிலப் பள்ளித்திட்டத்தை எடுத்துப் படிக்கும் மாணவர்களுக்குப் பெரிதான ஒரு துரோகத்தைச் செய்துகொண்டிருக்கிறது என்பதே அறிந்த உண்மையாக இருந்தது.

நீட் என்பது தொடர்ந்து இந்துத்துவ உயர் சாதிகள் இந்தச் சமூகத்தைத் தங்கள் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முயற்சிக்கும் ஒரு வித்தை. குலக்கல்வி முறையில் தாங்கள் மட்டுமே கல்வி கற்றதன் மூலம் ஒரு சமூகத்தைத் தங்கள் அறிவால் அடக்கி வைத்ததுபோல இந்த நூற்றாண்டிலும் திட்டமிட்டது இந்துத்துவா கட்டமைப்பு. இந்தக் கட்டமைப்புகள் பதற்றப்படுவதில்லை. இழப்புகளைக் கண்டு கண்ணீர் விடுவதில்லை. மிகுந்த இறுக்கத்துடன் ஆனால், திடத்துடன் அவை முன்னேறுகின்றன.

மிகத் தெளிவான ஒரே கோட்பாடுதான். வாழ்வில் விளிம்பு நிலையில் இருக்கும் மனிதர்களுக்குக் கல்வி வாய்ப்புகளைக் கிடைக்காமல் செய்வதன்மூலம் மறுபடி ஓர் அடிமைச் சமுதாயத்தை உருவாக்கும் திட்டம்தான் நீட். அனிதா என்னும் மாணவி தொடர்ந்து இதை எதிர்த்துப் போராடினார். அழகான ஆங்கில உச்சரிப்போடு அகன்ற கண்கள் அலைப்பாய அவர் கொடுத்த பேட்டியை அவர் மரணத்துக்குப் பிறகு பார்த்தேன். மிக மிக எளிமையான மனநிலை கொண்ட பெண். பெரும் அசுர முயற்சியால்தான் அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

2012ஆம் ஆண்டு என நினைக்கிறேன். விழுப்புரம் பக்கம் கேவிப்பாளையம் என்னும் ஊரில் உள்ள பெண் அண்ணா பல்கலைக்கழகத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாள். அவள் வயிற்றுவலியில் தற்கொலை செய்துகொண்டாள் என்பது வரை பலவிதமான வதந்திகளுக்கு நடுவே அண்ணா பல்கலைக்கழகத்தை அணுகியபோது எந்தவிதமான பொறுப்பான பதிலும் இல்லை. விழுப்புரம் கிளம்பிப் போய் அங்கிருந்து அப்பெண்ணின் வீட்டுக்குப் போனபோது அப்பெண்ணின் தகப்பன்வழி பாட்டி நம்மைப் பார்த்ததும் கதறினார்.

அப்பெண்ணின் மதிப்பெண்ணைக் காட்டினார். அனிதாவுக்கு இணையான உயர்ந்த மதிப்பெண் எடுத்திருந்தார்.

“எவ்வளவோ ஆசப்பட்டு ஒரு காணி நிலத்த வித்துதாம்மா காலேஜுல சேத்தோம்... ஆனா, இப்டி செஞ்சிட்டாளே ஆத்தீ... தாங்க முடிலம்மா... தாயில்லாப் பொண்ணு... எம்புள்ள தறுதல... குடிச்சே அழிச்சிட்டான்... இனி என்ன யார் தாயீ மீட்பா?”

கதறி அழுதார். அப்பெண்ணின் புகைப்படத்தை நெஞ்சோடு கட்டிப் பிடித்தபடி கதறினார். கூரை வீடு. ஆங்காங்கே பொத்தல்கள். அப்பெண்ணின் சூட்கேஸில் நான்கு செட் சுரிதார். சில புத்தகங்கள். அப்பெண்ணின் அப்பா திண்ணையில் எதுவும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்.

அப்பெண்ணின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைக்கூடக் கொடுக்காமல் காவல்துறை அவர்களை இழுத்தடித்துக் கொண்டிருந்தது. அப்பெண்ணின் தந்தைக்கு அவ்வழக்கில் தொடர்ந்து போராடும் வலு இல்லை. ஒரே தங்கை பள்ளியிலிருந்து வந்து மருண்ட கண்களோடு என்னைப் பார்த்தார்.

“தாயீ... இவுக சென்னைலருந்து வந்திருக்காக... எல்லாம் உங்கக்கா விஷயமாதான்... கலர் வாங்கிட்டு வா…”

நான் வேண்டாமென மறுத்தேன். அவர்கள் எல்லோரும் அண்ணா பல்கலைக்குச் சென்று அப்பெண்ணைப் பார்த்து வந்ததை அந்தப் பாட்டி கூறியபடி இருக்கிறார்.

“ஏதாச்சும் செஞ்சன்னா உதவியா இருக்கும் தாயீ?”

கையறு நிலையில் அப்பாட்டியின் கண்ணீரின் முன் நின்றேன். இப்படி தான் இயலாமையின் நிர்வாணத்தில் நம் அரசு, அமைச்சர்கள் நம்மை நிற்க வைக்கிறார்கள். இன்னும் நான் அந்தப் பெண்ணின் பெயரை உங்களிடம் பகிரவில்லை. அதுதான் மிக துயரமானது.

அப்பெண்ணின் பெயர் தைரியலஷ்மி.

படிக்கும் ஆசையில் முன்னுக்கு வரும் பிள்ளைகள் பல தரப்பட்ட வாழ்வியல் நிலைகளிலிருந்து வருவதை நம் கல்வி அமைப்போ அல்லது அரசாங்கமோ கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களின் சிரமம் களைய எந்த முயற்சியும் இல்லை.

தைரியலஷ்மி இறந்து ஒரு வாரத்தில் இன்னொரு மாணவரும் தூக்கிலிட்டு இறந்தார். அதை ஒரு காதல் கதையாகக்கூட மாற்ற முயற்சி எடுத்தார்கள். ஆங்கில வழி வகுப்புகளைப் பின்தொடர்வதில் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து வைக்க இங்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன? எதுவுமே இல்லை என்னும்போது அவர்களை அமிழ்த்தும் தாழ்வு மனப்பான்மையை எப்படி நீங்கள் களையப் போகிறீர்கள்?

அரசாங்கம் முன்னிறுத்தும் அரசாங்கப் பள்ளிகளிலிருந்து சில தனியார் பள்ளிகள் வரை இருக்கும் பாடத்திட்டத்தைப் படித்துவரும் மாணவர்களால் எப்படி திடீரென சி.பி.எஸ்.சி, மெட்ரிக் படிக்கும் மாணவர்களுடன் போட்டி போட இயலும்? இதில் ஏற்றத் தாழ்வில்லை. ஆனால், மலையைப் பற்றிப் படித்த மாணவருக்குக் கடலைப் பற்றிப் பரீட்சை எழுத சொல்லும் வன்முறையைத்தான் இந்த அரசாங்கம், நீதிமன்றம் எல்லாமே செய்கின்றன. கணவன் என்பவர்கள் திருமணத்துக்குப் பிறகு பெண்கள்மீது கட்டாய உறவு கொள்வதைக் குற்றமாகக் கருத இயலாது எனச் சமீபத்தில் தீர்ப்புக் கொடுத்ததுதானே இந்த உச்ச நீதிமன்றம்?

இந்த நீதிமன்றம் எப்படி நீட் தேர்வுக்கு மட்டும் நியாயமான தீர்ப்பைத் தந்துவிடும்? மக்களின் அரசாக பிஜேபி இல்லாதபோது, அதன் ஒரே குறிக்கோள் இந்துத்துவா சிந்தனைகளை முன்னெடுப்பதாக இருக்கும்போது, நியாயங்கள் எப்படிக் கிட்டும்?

அதன் விளைவே அனிதாவின் தற்கொலை. தங்களின் சம்பள உயர்வுக்காக மட்டுமே போராடுவதாக மாறிவிட்ட ஆசிரியர் சங்கங்கள் இனிமேலாவது இது போன்ற அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பது நன்று.

எல்லாம் சரி. நாம் என்ன செய்ய வேண்டும்?

ஒன்றுபட வேண்டும். ஒன்றுபட்டுப் போராட வேண்டும்

கட்டுரையாளர் குறிப்பு: எழுத்தாளர் தமயந்தி

ஒடுக்கப்பட்ட பெண்களின் சார்பில் தொடர்ந்து எழுதி வரும் எழுத்தாளர். இவரது ‘அக்கக்கா குருவிகள்’, ‘சாம்பல் கிண்ணம்’ சிறுகதைத் தொகுப்புகள் வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றவை. இவரது முக்கிய கட்டுரைத் தொகுப்பு ‘இந்த நதி நனைவதற்கல்ல’. திரைப்படத்துறையில் பணியாற்றி வருகிறார். இயக்குநர் மீரா கதிரவனின் ‘விழித்திரு’ திரைப்படத்தில் வசனமும், பாடலும் எழுதியுள்ளார்.

வல்லமை தாராயோ - 1 - தமயந்தி

வல்லமை தாராயோ - 2 - தமயந்தி

வல்லமை தாராயோ - 3 - தமயந்தி

வல்லமை தாராயோ - 4 - தமயந்தி

வல்லமை தாராயோ - 5 - தமயந்தி

வல்லமை தாராயோ - 6 - தமயந்தி

வல்லமை தாராயோ - 7 - தமயந்தி

வல்லமை தாராயோ - 8 - தமயந்தி

வல்லமை தாராயோ - 9 - தமயந்தி

வல்லமை தாராயோ - 10 - தமயந்தி

வல்லமை தாராயோ - 11 - தமயந்தி

வல்லமை தாராயோ - 12 - தமயந்தி

வல்லமை தாராயோ - 13 - தமயந்தி

வல்லமை தாராயோ - 14 - தமயந்தி

வல்லமை தாராயோ - 15 - தமயந்தி

வல்லமை தாராயோ - 16 - தமயந்தி

வல்லமை தாராயோ - 17 - தமயந்தி

வல்லமை தாராயோ - 18 - தமயந்தி

வல்லமை தாராயோ - 19 - தமயந்தி

வல்லமை தாராயோ - 20 - தமயந்தி

வல்லமை தாராயோ - 21 - தமயந்தி

வல்லமை தாராயோ - 22 - தமயந்தி

வல்லமை தாராயோ - 23 - தமயந்தி

புதன், 6 செப் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon