தனுஷுக்கு போட்டியாக சிவகார்த்திகேயன்

வெள்ளி, 17 பிப் 2017

ரஜினிகாந்த் படத்தின் டைட்டில்களை எடுத்து நடிப்பதை இன்றைய தலைமுறை நடிகர்கள் ஒரு பிளஸ் பாயிண்டாக நினைக்கிறார்கள். ஆனால் இதில் அவரது மருமகன் தனுஷ் தான் முன்னிலை வகிக்கிறார். ‘பொல்லாதவன்’, ‘படிக்காதவன்’,‘மாப்பிள்ளை’ மற்றும் ‘தங்க மகன்’ ஆகிய 4 படங்கள் ரஜினி படத்தின் டைட்டிலில் எடுக்கப்பட்டது. இதில் ‘படிக்காதவன்’ திரைப்படம் அதன் காமெடி மற்றும் ஆக்‌ஷனுக்காக பார்க்கப்பட்டது. ‘மாப்பிள்ளை’ மற்றும் VIP 2 என வெளியாகயிருந்து பின்னர் ‘தங்க மகன்’ என வெளியான இந்த இரு படங்களும் சொல்லிக்கொள்ளும் அளவு இல்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான ‘பொல்லாதவன்’ திரைப்படம் மட்டுமே இந்த வரிசையில் சிறந்த படம் என்ற பெயர் பெற்றது.

தனுஷ் மட்டும் அல்லாது பலரும் ரஜினி படத்தின் டைட்டில்களை எடுத்து நடித்து வருகின்றனர். சென்ற ஆண்டு விஜய் சேதுபதி ‘தர்மதுரை’ என்ற ரஜினி பட டைட்டிலை பெற்று நடித்தார். ஆனால், அந்த திரைப்படம் விஜய் சேதுபதி நடிப்புக்காகவும் அதன் கதைக்காகவும் தான் பெரிதாக பேசப்பட்டது. ‘தர்மதுரை’ என்ற பெயர் அந்தப் படத்துக்கு பெரிய பிளஸ் என சொல்லிவிட முடியாது. தற்போது நீண்ட காலமாக தன்னை ரஜினி ரசிகன் என வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் ரஜினி பட டைட்டிலுடன் களமிறங்கியிருக்கிறார்.

‘தனி ஒருவன்’ படத்துக்குப் பிறகு சிவகார்த்திகேயனை வைத்து மோகன் ராஜா இயக்கும் திரைப்படத்துக்கு ‘வேலைக்காரன்’ என பெயர் சூட்டியுள்ளனர். இன்று சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு மோகன் ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் படத்தின் பெயரை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் , உழைப்பை உன்னதப்படுத்தும் ஒரு சிறந்த ‘வேலைக்காரன்’ சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ‘வேலைக்காரன்’ திரைப்படத்தில் சினேகா, நயன்தாரா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். வருகிற விநாயகர் சதுர்த்தி விடுமுறை சமயத்தில் இந்தத் திரைப்படம் வெளியாகவுள்ளது.