ஒரு ரூபாய்க்கு புடவை!

வெள்ளி, 17 பிப் 2017

அனைத்துப் பெண்களுக்கும் பல வண்ணங்களில் பலவிதமான புடவைகளை வாங்கிக் குவிப்பதில் அதிக ஆர்வம் இருக்கும். அதுவும் சலுகை விலையில் வாங்குவதில் பெண்கள் அளவில்லா சந்தோஷம் அடைவார்கள்.

இந்நிலையில், ஒரு ரூபாய்க்கு புடவை என்னும் வியாபார உத்தியைப் பயன்படுத்தி பெண்களைக் கவர்ந்துள்ளது ஒரு துணிக்கடை.

வாரணாசி மாஹ்மூர்கஞ்ச் சிக்ர பகுதியில் உள்ள துணிக்கடை உரிமையாளர் ஒருவர், ஸ்டாக்கில் உள்ள பழைய புடவைகளை விற்கும் முயற்சியாக ‘ஒரு ரூபாய்க்கு புடவை’ என்னும் சலுகையை அறிமுகப்படுத்தினார். அதன்படி, அந்த சலுகையைப் பெற முதலில் 500 ரூபாய்க்கு ஆடைகளை வாங்க வேண்டும். அவ்வாறு வாங்குபவர்களுக்கு மட்டுமே ஒரு ரூபாய் சலுகை புடவை கிடைக்கும்.

எனினும், இந்த சலுகை ஆயிரக்கணக்கான பெண்களைக் கவர்ந்தது. இதனால், அவர்கள் அந்தக் கடையில் குவியத் தொடங்கினர். கடையின் விளம்பரத்துக்காகவும், பழைய புடவைகளை விற்பனை செய்வதற்காகவும் அறிமுகப்படுத்திய சலுகை கற்பனை செய்யமுடியாத அளவுக்கு கூட்டத்தை வரவழைத்தது.

கூட்டம் அதிகரித்ததால், போலீஸார் தலையிட்டு போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த முயன்றுள்ளனர். ஆனால் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதைத் தொடர்ந்து, துணிக்கடை உரிமையாளர் சலுகையை திரும்பப் பெற்றுள்ளார். அதன்பின்னர், போலீஸார் பெண்களை சமாதனப்படுத்தி அங்கிருந்து வெளியேற்றி போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்.