ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் : ஓ.பி.எஸ். அணி!

வெள்ளி, 17 பிப் 2017

தமிழக சட்டசபையில் நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் இன்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் தனபாலை நேரில் சென்று சந்தித்தனர்.

நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்று ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த பொன்னையன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் செம்மலை, பாண்டியராஜன் உள்ளிட்டோர் தலைமைச் செயலகம் சென்று சபாநாயகர் தனபாலை சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

முன்னதாக, இன்று அதிமுக-வின் 134 எம்.எல்.ஏ.,க்களும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக கொறடா ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்தவர்கள் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்களித்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கொறடா பரிந்துரை செய்யலாம். மேலும் இவர்கள்மீது கட்சித் தாவல் சட்டம் அமல்படுத்தி அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்யும் நிலை இருப்பதாக தெரியவருகிறது.