பழனிச்சாமி நீடிப்பது சந்தேகம்தான் : மத்திய அமைச்சர்!

வெள்ளி, 17 பிப் 2017

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி நாளை வரை முதல்வராக நீடிப்பதே கேள்விகுறிதான் என்று, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ‘குடும்ப ஆட்சியை வர விடவேண்டாம். எடப்பாடி பழனிச்சாமி நாளை வரை முதல்வராக இருப்பாரா என்பதே கேள்விக்குறி. தமிழகம் தற்போதைய முதல்வரின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்காது. அதற்காக மக்கள் திமுக ஆட்சி வரவேண்டும் என்பதையும் விரும்பவில்லை’ என்றார்.

முன்னதாக, நேற்று நாகர்கோவிலில் செய்தியாளர்களைச் சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், ‘புதிய அரசால் தமிழகத்துக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவது இல்லை. 50 ஆண்டுகள் வாய்ப்புக் கொடுத்தும் கழகங்கள் எதுவும் செய்யவில்லை. தற்போது மக்கள் புதிய தேடலை நோக்கிச் செல்ல தொடங்கியுள்ளனர். அது பாஜக-தான். அதனால்தான் தமிழகத்தில் நல்லாட்சி தர முடியும். அண்மைக்கால நிகழ்வுகளால் தமிழகத்தின் தலை எழுத்தை நினைத்து வெட்கத்தோடு தலைகுனிய வேண்டிய நிலை உள்ளது. தமிழகத்தில் இதுவரை ஏற்பட்டிராத அரசியல் சூழல் ஏற்பட்டது. தற்போதுதான் தமிழகத்தில் நீண்டநாட்களாக இருந்த ஸ்திரமற்ற நிலை முடிவுக்கு வந்துள்ளது. ஆளுநர் பொறுமையாகவும் ஆழமாகவும் யோசித்து உறுதியான முடிவை எடுத்துள்ளார். எங்களைப் பொருத்தவரை, அதிமுக-வின் இரு தரப்புக்கும் ஆதரவு இல்லை. காரணம், இரு தரப்பினராலும் நல்லாட்சியைத் தர முடியாது’ என்றார்.