ரொக்கப் பிரச்னை மார்ச் வரை நீடிக்கும் : நோமுரா

வெள்ளி, 17 பிப் 2017

பண மதிப்பழிப்பின் தாக்கம் இன்னும் நீடிப்பதாகவும், தற்போதைய ரொக்க அளவீடுகள் மார்ச் வரை போதுமானதாக இல்லையென்றும் நோமுரா ஆய்வு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி வெளியான பண மதிப்பழிப்பு நடவடிக்கையால் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான வர்த்தகம் வரை அனைத்துத் தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாகினர். அது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜனவரி மாதத்தின் ஏற்றுமதி அதற்கு முந்தைய மாதத்தைவிட 5.72 சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில், பண மதிப்பழிப்பின் தாக்கம் இன்னும் நீடிப்பதாக நோமுரா நிறுவனத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பாக பேசிய நோமுரா இந்தியாவின் தலைமை பொருளாதார நிபுணர் சோனல் வர்மா, ‘இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு வர்த்தக அளவீடுகள் சரிந்தே காணப்படும். மார்ச் இறுதி வரை போதுமான அளவுக்கான ரொக்க பணப் புழக்கம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில்லை’ என்று கூறினார்.