உச்சநீதிமன்றத் தீர்ப்பே இறுதியானது : கட்ஜு!

வெள்ளி, 17 பிப் 2017

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து சசிகலா மேல்முறையீடு செய்ய வாய்ப்பே இல்லை என்று, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறியிருக்கிறார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘உச்சநீதிமன்றத் தீர்ப்பு இறுதியானது. அதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. அதற்கு சட்டத்தில் இடமே இல்லை. இந்த தீர்ப்பில் மறு ஆய்வு மனு மட்டுமே தாக்கல்செய்ய முடியும். அவ்வாறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டாலும் அது நிச்சயமாக தள்ளுபடி செய்யப்படும். மறு ஆய்வு மனுவால் எந்தப் பலனும் கிட்டாது. எனவே, சசிகலா சிறைத் தண்டனையை அனுபவிப்பதைத் தவிர வேறு வழியில்லை’ என கட்ஜு தெரிவித்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிபற்றி உடனடியாக கருத்து சொல்ல முடியாது. அவரது ஆட்சியை 6 மாத காலம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும், பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பதால் அவர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என நான் கருதுகிறேன்’ என்று அவர் கூறினார்.