சசிகலா, தினகரன் நியமனம் செல்லாது : மைத்ரேயன்

வெள்ளி, 17 பிப் 2017

அதிமுக பொதுச் செயலாளராக வி.கே.சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனும் பதவியில் அமர்த்தப்பட்டது செல்லாது என, தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.,க்கள் 12 பேர் நேற்று புகார் தெரிவித்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இவர், கடந்த 5ஆம் தேதி அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இந்நிலையில், சசிகலா சிறைத் தண்டனை பெற்றதால் அவரது அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழகத்தில் நேற்று புதிய அரசு பொறுப்பேற்றது.

பன்னீர்செல்வத்தை 12 எம்.பி.,க்கள் மற்றும் 9 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரித்து வருகின்றனர். இந்நிலையில், மாநிலங்களவை எம்.பி., டாக்டர் வி.மைத்ரேயன் தலைமையில் நேற்று டெல்லி வந்த எம்.பி.,க்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர். தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் கொடுத்த புகாரில், ‘கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதும், துணை பொதுச் செயலாளராக தினகரன் நியமிக்கப்பட்டதும் செல்லாது. அதிமுக-வில் தற்காலிக பொதுச் செயலாளர் பதவி என்பது இல்லை. சசிகலாவுக்கு சிறப்பு அதிகாரங்கள் அளிக்கப்பட்டிருப்பதும் கட்சிக்கு விரோதமானது’ என்று தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என தேர்தல் ஆணையத்திடம் அதிமுக அதிருப்தி எம்.பி., சசிகலா புஷ்பா ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இதற்கு விளக்கம் கேட்டு ஆணையம் சார்பில் அதிமுக-வுக்கு கடிதம் அனுப்பியது. இதற்கு அதிமுக இதுவரை விளக்கம் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக அவைத் தலைவராக இருந்த மதுசூதனன் சசிகலா தரப்பிலிருந்து திடீரென பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு அளித்தார். இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா அவரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தார். இந்நிலையில் பன்னீர் செல்வம் தரப்பிலிருக்கும் மதுசூதனன் இன்று அதிமுகவிலிருந்து சசிகலா, டி.டி.வி தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.