மூன்று சக்கர வாகன விற்பனை சரிவு : மஹிந்திரா

வெள்ளி, 17 பிப் 2017

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான மஹிந்திரா நிறுவனம், பண மதிப்பிழப்பு விவகாரத்தால் மக்களிடம் பணப்புழக்கம் இல்லாத காரணத்தால் மூன்று சக்கர வாகனங்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

இதுகுறித்து இந்நிறுவனத்தின் விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் விஜய் நெக்ரா கூறியதாவது: ‘கடந்த நவம்பர் மாதம் முதல் மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையில் பலத்த அடி வாங்கியுள்ளோம். வாடிக்கையாளர்களிடம் போதிய பணமில்லாத காரணத்தால் வாகனங்களின் விற்பனை சரிந்துள்ளது. மஹிந்திரா நிறுவனம் மூன்று சக்கர வாகன உற்பத்தியை ‘ஆல்பா’ என்ற பெயரில் சிறிய ரக வாகன உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. மேலும் ‘சுப்ரோ’ என்ற பெயரில் 700 மற்றும் 1,050 கிலோ எடைகொண்ட வாகனங்களுக்கு சந்தை மதிப்பில் 10 சதவிகிதம் வரை சலுகை அளிக்கப்படும். தற்போது பண மதிப்பழிப்பு விவகாரத்தால் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டின் முதலாம் காலாண்டில் மக்களிடம் பணப்புழக்கம் அதிகரித்தவுடன் வாகன விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கும்.

மஹிந்திரா நிறுவனம் ரூ.135 கோடியில் ‘சூப்ரோ’ நிறுவனத்தை மேம்படுத்தி 11 புதிய தயாரிப்புகளை வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் எடை 700 கிலோவிலிருந்து 1,050 கிலோ வரை இருக்கும். சுப்ரோ நிறுவனம் வருடத்துக்கு 60,000 வாகனங்களை புதிதாக தயாரித்து வெளியிடவுள்ளது’ இவ்வாறு அவர் கூறினார்.