பன்னீருடன் எச்.ராஜா சந்திப்பு!

வெள்ளி, 17 பிப் 2017

அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவரை ஆட்சியமைக்க வரும்படி ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்தார். மேலும் 15 நாட்களில் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நேற்று, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். நாளை கூடும் சட்டசபைக் கூட்டத்தில் பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க இருக்கிறார். இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சந்தித்துப் பேசியுள்ளார்.

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் இல்லத்தில் நேற்றிரவு இந்தச் சந்திப்பு நடைபெற்றது. தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இருவரும் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓ.பன்னீர்செல்வத்தை பாரதிய ஜனதா கட்சி பின்னணியில் இருந்து இயக்குவதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பன்னீர்செல்வத்தை சந்தித்துப் பேசியுள்ளது மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.