பங்குகளை திரும்பப் பெறும் டி.சி.எஸ்.!

வெள்ளி, 17 பிப் 2017

இந்தியாவின் முன்னணி ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்., சந்தையில் வர்த்தகமாகும் அதன் பங்குகளில் கணிசமான பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நாட்டிலுள்ள ஐ.டி. நிறுவனங்களிடம் பெரும்தொகை பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. எனவே, அந்நிறுவனங்கள் பங்குகளை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்குமுன்பு முன்னணி ஐ.டி. நிறுவனங்களுள் ஒன்றான காக்னிசன்ட் தனது 340 கோடி டாலர் அளவிலான பங்குகளை திரும்ப வாங்குவதாக அறிவித்தது. அதேபோல, தற்போது டி.சி.எஸ். நிறுவனம் தனது கணிசமான பங்குகளை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலித்து வருகிறது. அதன் இயக்குனர் குழு இதுகுறித்து விவாதித்து வருகிறது.

கடந்த டிசம்பர் மாத இறுதி நிலவரப்படி, டி.சி.எஸ். நிறுவனத்திடம் ரூ.43,169 கோடி மதிப்பிலான பங்குகள் உள்ளன. இதில் எவ்வளவு தொகையை திரும்பப்பெறப் போகிறது என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. வருகிற 20ஆம் நடைபெற உள்ள இயக்குனர் குழுக் கூட்டத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து டி.சி.எஸ். நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்.சந்திரசேகரன் பேசுகையில், ‘பங்குகளை திரும்ப வாங்குவது குறித்தும், டிவிடெண்ட் குறித்தும் முதலீட்டாளர்கள் கேட்டிருக்கிறார்கள். இதுகுறித்து இயக்குநர் குழுவில் விவாதிக்கவுள்ளோம்’ என்று கூறினார்.