சிறையில் சசிகலா- தப்பியது தமிழகம்:ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

வெள்ளி, 17 பிப் 2017

சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா தண்டனை பெற்றதால் தமிழகம் தப்பித்துக் கொண்டது. ஒருவேளை, சசிகலா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டிருந்தால் தமிழகத்துக்கு அதைவிட வேறு அவமானம் இருந்திருக்காது என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் திறப்பு விழாவில் பேசிய ஈ.வி.கே.எஸ், ‘அம்மையார் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எப்படியும் அடுத்த முதல்வர் ஆகிவிடலாம் என கற்பனைக் கனவில் மிதந்தார் சசிகலா. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் கட்டுக்கோப்பாக தொண்டர்களுக்காக வைத்திருந்த அதிமுக-வை இப்போது சசிகலா தன் வசமாக்கிக் கொண்டுள்ளார். தனக்குதானே அடுத்த அதிமுக பொதுச்செயலாளர் என பிரகடனப்படுத்தி, அடுத்த முதல்வராகிவிடலாம் எனத் துடித்தார். ஆனால் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயிலுக்குள் தள்ளப்பட்டார். சசிகலா மட்டும் முதலமைச்சர் ஆகி இருந்தால் தமிழ்நாட்டுக்கு அதைவிட வேறு அவமானம் இருந்திருக்காது. இதனால் தமிழகம் தப்பியது. ஜெயலலிதாவை பாதுகாத்தோம், உருவாக்கினோம் என்று சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் கூறுகிறார்கள். எம்.ஜி.ஆரைக்கூட நாங்கள்தான் உருவாக்கினோம் என்றுகூட இவர்கள் சொன்னாலும் சொல்வார்கள்.

இப்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆகி இருக்கிறார். இவரது வீட்டில் பல கோடி ரூபாய் பணம் கண்டெய்னர் லாரி மூலம் எடுக்கப்பட்டது. இதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். காமராஜர் ஆட்சிக் காலத்தில் மதிய உணவு வழங்கினார். ஏழைக் குழந்தைகள் படிக்க முடிந்தது. ஆனால் இன்று கொள்ளைதான் அடிக்கப்படுகிறது.’ என்றார்

முன்னதாக, ஈரோட்டில் திருமண விழாவில் பேசிய ஈ.வி.கே.எஸ், ‘தேசிய அளவில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் வழக்குத் தொடுத்து மிகப்பெரிய தண்டனையை வாங்கிக் கொடுத்திருக்கிறார். அயோக்கியத்தனம் செய்தால் தப்பிக்க முடியாது என்பதை உணரச் செய்திருக்கிறார். தவறு செய்தவர்களும் மக்களை ஏமாற்றியவர்களும் கல்லறைக்கு அல்லது சிறைக்குத்தான் செல்ல வேண்டும். இல்லையெனில் தப்ப முடியாது. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு. ஜெயலலிதா கல்லறைக்குள் இருக்கும்போதே இப்படி அடி விழுகிறதே, அவர் உயிரோடு இருந்தபோது எப்படி அடி வாங்கியிருப்பார் என அனைவரும் சிந்திக்க வேண்டும். கிராமத்தில் உள்ள மக்கள் ஜெயலலிதாவை அடித்துக் கொன்றுவிட்டதாகச் சொல்கின்றனர். நாட்டை குட்டிச்சுவராக்கினால்போதும் என நினைத்தால், சிறையில் போய் நிம்மதியாக இருக்க வேண்டியதுதான்’ என்றார்.