பொம்மை மந்திரி சபை நீடிக்காது : ராமதாஸ்

வெள்ளி, 17 பிப் 2017

தற்போதுள்ள எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 4 ஆண்டுகள் வரை நீடிக்காது என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். கடலூர் வடக்கு, கிழக்கு மாவட்ட பாமக-வின் பொதுக்குழு கூட்டம் கடலூரில் நடந்தது. பாமக மாநில துணை பொதுச்செயலாளர் பழ.தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு ராமதாஸ் பேசியதாவது: தமிழகத்தில் பொம்மை மந்திரி சபை, பினாமி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைந்துள்ளது. இந்த ஆட்சி இன்னும் 4 ஆண்டுகள் நீடிக்காது. ஆனால் இவர்கள் ஒற்றுமையாக இருப்பார்கள். கொள்கைப் பிடிப்புடன் என்று நினைத்துவிடாதீர்கள், ஊழல் செய்வதில் ஒற்றுமையாக இருப்பார்கள். கடந்த 50 ஆண்டுகளாக ஊழல் கட்சிகள்தான் ஆட்சி செய்தன. சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு சொன்ன உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிடும்போது, தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் ஊழலை சாதாரணமாக்கிவிட்டார்கள். அதை மக்கள் கண்டுகொள்ளாமல் செய்யுமளவுக்கு ஆக்கிவிட்டார்கள். உயிர்க்கொல்லி நோயான ஊழலின் பிடியில் இருந்து சமுதாயத்தை மீட்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கான திட்டங்களை கையில் வைத்துள்ளேன் என்று, அன்புமணி தொடர்ந்து சொல்லிக்கொண்டு வருகிறார். எனவே, புதியதோர் தமிழகம் செய்ய ஊடகங்கள் எங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். ஊழலுக்கு எதிரான முற்போக்கு சக்திகள் எங்களுடன் இணைய வேண்டும். நாங்கள் ஊழலுக்கு எதிரான இயக்கத்தை முன்னெடுத்து செல்லப்போகிறோம். அனைத்து சமுதாய மக்களும் பாமக-வை நோக்கி வந்துகொண்டு இருக்கிறார்கள். ஏனெனில், அன்புமணி ராமதாஸ் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறார். எனவே, அடுத்துவரும் தேர்தலில் பாமக ஆட்சி அமைய மக்கள் ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்