வங்கிக் கடன் : ரூ.80,000 கோடி வசூல்!

புதன், 11 ஜன 2017

பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியான பின்னர், வங்கிகளில் பெற்ற கடனை மதிப்பிழந்த நோட்டுகளைப் பயன்படுத்தி திருப்பிச் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டபிறகு வங்கிகளுக்குச் செலுத்தவேண்டிய கடன் ரூ.80,000 கோடி வசூலாகியுள்ளது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டிலுள்ள கள்ள நோட்டுகளையும் கறுப்புப் பணத்தையும் ஒழிக்கும் நோக்கத்தில், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி வெளியானது. அதைத்தொடர்ந்து மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய டிசம்பர் 30வரை கெடு விதிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி பலர் வங்கியில் வாங்கிய கடனை செல்லாத ரூபாய் நோட்டுகள் மூலம் திருப்பிச் செலுத்தினர். இதில் கணக்கில் வராத பணம், வரி ஏய்ப்பு செய்த பணம் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது என்று வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவுக்கு தகவல்கள் கிடைத்தன. அதன் அடிப்படையில் ஆய்வு செய்ததில் செல்லாத ரூபாய் நோட்டுகள் மூலம் ரூ.80,000 கோடி கடன் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'நவம்பர் மாதம் 9ஆம் தேதிக்கு பிறகு செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளைப் பயன்படுத்தி, வங்கிகளில் மக்கள் பெற்ற ரூ.80,000 கோடி கடன் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. ஏறக்குறைய 60 லட்சத்துக்கு மேற்பட்ட வங்கிக்கணக்குகளில் ரூ.2 லட்சத்துக்கு அதிகமாக பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்தோம். ரூ.16,000 கோடிக்கு அதிமான பணம் கூட்டுறவு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் நீண்டநாட்களாக இயங்காத கணக்குகளில் ரூ.25,000 கோடி வரை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.