வறட்சி: ஒரு நாள் ஊதியத்தைக் கொடுத்த அரசு ஊழியர்கள்!

புதன், 11 ஜன 2017

தமிழகம் முழுக்க வறட்சியால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக முதல்வர் பன்னீர் செல்வம் அறிக்கையில் தெரிவித்திருக்கும் நிலையில், அதிக அளவில் விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாக அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தி வருகின்றன.

இந்நிலையில், அரசு ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை வறட்சி பாதிப்புக்கு வழங்க முன் வந்துள்ளார்கள். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கே.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

காவிரி நதிநீர் இல்லாத நிலையில் பருவமழையும் பொய்த்து போனதால் தமிழக விவசாயிகள் துயரத்தில் வாடியுள்ளனர். பயிர்கள் கருகியதால் விவசாயிகள் சிலர் தற்கொலை செய்துள்ளனர்.

விவசாயிகளின் வேதனையான நிலையை அறிந்து அவர்கள் துக்கத்தில் பங்கெடுக்கும் வகையில் அரசு அலுவலக உதவியாளர்கள், ஊராட்சி, நகராட்சி, அனைத்து பல்கலை கழகங்கனின் பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள் ஒருநாள் சம்பளத்தை இந்த மாத ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளோம்.

விவசாயிகள் நலன் காக்க ஒருநாள் ஊழியத்தை பிடித்தம் செய்து கொள்ள முதல்-அமைச்சரை கேட்டுக் கொள்கிறோம்.

வணிக வரித்துறை அலுவலக உதவியாளர்கள் சங்கம், மாநகராட்சி, நகராட்சி அலுவலக உதவியாளர்கள் சங்கம், ஊராட்சி, குடிநீர் மேல் நிலையநீர் தேக்க தொட்டி, கை பம்பு மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் முதல்- அமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.