தனி மரமான ‘பைரவா’

புதன், 11 ஜன 2017

‘பைரவா’ படத்தின் டிரெய்லரை பார்த்தவர்கள் அதன் இறுதியில் விஜய் பேசும் வசனத்தை கவனித்திருப்பீர்கள், **நான் வரேன் தனியா** என விஜய் பேசும் வசனம் உண்மையாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. முன்பெல்லாம் பெரிய பட்ஜெட் படங்கள் வெளிவரும் நேரம் சிறு பட்ஜெட் படங்கள் வெளியாவதை நிறுத்தி வைப்பது வழக்கம். அதற்கு ‘ஐ’ படத்தைக் கூட எடுத்துக்காட்டாக கூறலாம். ஆனால் சில நேரங்களில் தங்கள் கதை மீது நம்பிக்கை கொண்டவர்கள், தங்களது சிறு பட்ஜெட் படங்களுக்கு போதிய அளவில் திரையரங்குகள் கிடைக்காத போதிலும் அதனை ரிலீஸ் செய்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த விஷயம் தமிழ் சினிமாவில் வழக்கமாக நடந்து வருகிறது. இப்போது பைரவா விஷயத்துக்கு வருவோம். விஜய்யின் ‘பைரவா’ படம் பொங்கலுக்கு ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டதும் அதற்கு போட்டியாக புரியாத புதிர், கோடிட்ட இடங்களை நிரப்புக, புரூஸ் லீ மற்றும் அதே கண்கள் ஆகிய 4 படங்களும் பொங்கல் ரேசில் களமிறங்குவது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஜி.வி.பிரகாஷின் புரூஸ் லீ இந்த ரேசிலிருந்து முதலாவதாக விலகியது. அதன் பின்னர் அதே கண்கள் மற்றும் புரியாத புதிர் திரைப்படங்களும் விலகியுள்ளது. பார்த்திபன் தனது ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் பொங்கலுக்கு ‘விஜய்’யம் செய்யும் என விளம்பரம் செய்திருந்தார். ஆனால் அந்த திரைப்படமும் வெளியாவது சந்தேகம் என்ற நிலையில் தான் இருக்கிறது. ஒரு படத்தோடு ரிலீஸாக இருந்த இத்தனை படங்களும் பின் வாங்கியிருக்கிறது. இதனால் ‘பைரவா’ ஒத்தையாக நிற்கிறார்.