16 வருட உயர்வில் எரிவாயு விற்பனை!

புதன், 11 ஜன 2017

கடந்த 16 வருடங்களிலேயே அதிகபட்சமாக 2016ஆம் ஆண்டில் எரிவாயு விற்பனை 10.7 சதவிகிதம் உயர்வடைந்துள்ளதாக பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

இதுபற்றி பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2016ஆம் ஆண்டில் நாட்டில் நிலவிய அதிகமான தேவை காரணமாக ஆயில் விற்பனை 10.7 சதவிகிதம் அதிகரித்து 196.48 மில்லியன் டன் அளவிலான ஆயில் நுகரப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் அதிகளவில் விற்பனையானதால் ஒட்டுமொத்த எரிவாயு விற்பனையில் உயர்வு ஏற்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் இவற்றுக்கான தேவை அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து 2016ஆம் ஆண்டிலும் தேவை 12.2 சதவிகிதம் அதிகரித்தது.

அதேபோல, உள்நாட்டில் வாகன விற்பனை அதிகரித்ததால், டீசல் தேவை 5.6 சதவிகிதம் அதிகரித்தது. இது கடந்த நான்கு வருடங்களில் விற்பனையான டீசலைவிட அதிகமாகும். மேலும், சமையல் எரிவாயு விற்பனை 11.3 சதவிகிதம் அதிகரித்து, 21.19 மில்லியன் டன் அளவிலான சமையல் எரிவாயு விற்பனையாகியுள்ளது. நவம்பர் மாதம் நோட்டுகள் மீது தடை விதிக்கப்பட்ட போதிலும் பெட்ரோல் டீசல் நிரப்புவதற்கு இந்நோட்டுகளை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டதால் எரிவாயு விற்பனையில் பெரிய தாக்கம் எதுவும் ஏற்படவில்லை.