சசிகலா கடிதத்தை மத்திய அமைச்சரிடம் கொடுத்த தம்பிதுரை!

புதன், 11 ஜன 2017

ஜல்லிகட்டு போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இன்று பிரதமரைச் சந்திக்க டெல்லி சென்ற அ.தி.மு.க எம்.பிக்கள் பிரதமரை சந்திக்க முடியாமல் அவரது அலுவலகத்தில் மனுவை கொடுத்த நிலையில், சசிகலா பிரதமருக்கு எழுதிய கடித்தை மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் அனில் மாதவ் தேவிடம் கொடுத்து விட்டு திரும்பினார்கள். சசிகலா எழுதியுள்ள கடிதத்தில், இந்த வார இறுதியில் பொங்கல் பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், ஜல்லிகட்டு தொடர்பான பிரச்னையை அவசர பிரச்னையாகக் கருதி, பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.ஜல்லிகட்டு விளையாட்டு கிராம மக்கள் மற்றும் விவசாயத்துடன் பின்னிப்பிணைந்த ஒரு அம்சமாக விளங்குபவை. பொங்கல் பண்டிகையின் அத்தியாவசிய அங்கமாக விளங்கும் ஜல்லி கட்டு, தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு என்றும் மற்ற விளையாட்டுகளில் குதிரை, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் துன்புறுத்தப்படுவதைப் போல் ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு விளையாட்டு அதற்கே உரித்தான பொலிவுடன் தமிழகத்தின் பிரதான விளையாட்டாகத் திகழ வேண்டும் என்பதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். எனவே, பாரம்பரிய ஜல்லிகட்டு விளையாட்டை தமிழ் மண்ணில் நடத்திட தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பிரதமரை வலியுறுத்தியுள்ள சசிகலா, காளைகளை காட்சிப்பட்டியலில் இருந்து நீக்கிடும் வகையில், சட்டத்திருத்தத்துடன் கூடிய அவசரச் சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும்.