போலீஸ் என்கவுண்டர்: பிரபல ரவுடி சுட்டுக் கொலை!

புதன், 11 ஜன 2017

சிவகங்கை அருகே பிரபல ரவுடி கார்த்திகைச் செல்வன் என்பவரை போலீஸார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

சிவகங்கை மாவட்டம் வயிரவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திகைச் செல்வன். சிறு வேலை செய்து வந்த இவர் ரவுடியாக சுற்றித் திரிந்து வழிப்பறி, கொலை, கொள்ளை என பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 22 கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் , மதுரை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் 8 வழக்குகள் உள்ளது. 30 வயதான கார்த்திகைச்செல்வன் பலமுறை கைது செய்யப்பட்டு சிறைக்குப் போனவர். அடிக்கடி கைதாகி வெளியே வரும் இவர் தொடர்ந்து கொள்ளையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது கூட்டாளிகள் சிலருடன் மதுரையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் கொள்ளையடித்த கார்த்திகைச் செல்வன் உள்பட 6 பேரை போலீஸார் தேடி வந்தனர்.

தனிப்படை விசாரணையில் சிவகங்கை அருகே அவர்கள் பதுங்கியிருந்ததாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று இரவு போலீஸார் அங்கு முற்றுகையிட்டனர். அப்போது கார்த்திகைச்செல்வன் வீச்சரிவாளால் தாக்கியதில் காவலர் வேல்முருகன் என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. போலீஸார் தாக்குதலை சமாளிக்க முடியாமல் திரும்பி வேல்முருகனை மருத்துவமனையில் சேர்த்த பின்னர் கூடுதல் போலீஸாருடன் மீண்டும் தேடுதல் வேட்டையில் இறங்கினர். புதுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் தேடுதல் வேட்டை நடத்தினர். இந்நிலையில் இன்று காலை 9 மணியளவில் நைனாங்குளம் பாலம் அருகே பதுங்கியிருந்த கார்த்திகைச் செல்வனை போலீஸார் சுற்றி வளைத்தனர். ஆனால் அவர் மீண்டும் தாக்க முற்பட்டதால் போலீஸார் தற்காப்புக்காக சுட்டதில் கார்த்திகைச்செல்வன் இறந்தார்.