தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு: தா.பாண்டியன்

புதன், 11 ஜன 2017

தமிழர்களின் கலாசாரத்தின் ஆணி வேரை அறுப்பது, சமஸ்கிருதத்தை திணிப்பது என உழைக்கும் மக்களுக்கு எதிராக மத்திய அரசு உள்ளது என்று தா.பாண்டியன் கூறி உள்ளார்.

புதுவை மாநில இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் நடந்த முப்பெரும் விழாவில் பங்கேற்க வந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழக முன்னாள் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:-

2017-ஆம் ஆண்டு துயரத்தோடு பிறந்துள்ளது. மக்கள் மத்தியில் மகிழ்ச்சி இல்லை. கடந்த 2016-ஆம் ஆண்டு நம்மை வெகுவாக சோதித்தது. இயற்கையின் சோதனை ஒருபுறம் என்றால் மனிதனின் ஆணவம் மறுபுறம் என சோதனைகளை சந்தித்தோம். நாட்டின் நிர்வாகத்தை சரியாக நடத்த பா.ஜனதாவுக்கு தெரியவில்லை. கருப்பு பணம் வைத்திருப்பவர்களை தண்டிக்க சட்டம் உள்ளது. அதனை கண்காணிக்க தனி இலாகா உள்ளது.

நாட்டில் வருமான வரி செலுத்துபவர்கள் 1 சதவீதம் பேர் மட்டுமே என்று கூறுகிறார்கள். அப்படியானால் மற்றவர்கள் எல்லாம் வரி கட்டவில்லையா? ஒவ்வொரு பொருள் வாங்கும்போதும் அதற்குரிய வரியை மக்கள் செலுத்துகின்றனர். தமிழர்கள் பாரம்பரியமாக ஏறு தழுவுதல் போட்டியை நடத்தி வருகிறார்கள். இந்த ஏறு தழுவுதல் போட்டியில் வெல்லும் ஆண் மகனை தான் பெண்கள் விரும்பி மணந்தார்கள். தமிழர்களின் பாரம்பரியம் தெரியாதவர்கள் இதை தடுக்கப் பார்க்கிறார்கள்.இது தொடர்பான வழக்கு 4 வருடங்களாக நடக்கிறது. தமிழர்களின் கலாசாரத்தின் ஆணி வேரை அறுப்பது, சமஸ்கிருதத்தை திணிப்பது என உழைக்கும் மக்களுக்கு எதிராக மத்திய அரசு உள்ளது என்று தா.பாண்டி யன் கூறினார்.