தமிழகம் அமெரிக்காவிலா உள்ளது ? இந்தியாவில்தானே உள்ளது: தம்பித்துரை

புதன், 11 ஜன 2017

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கக்கோரி, டெல்லியில் அ.தி.மு.க எம்.பிக்களின் மனுவை பிரதமர் மோடி பெற்றுக் கொள்ளாத நிலையில், அவர்கள் பிரதமர் அலுவலகத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தலைமையில் மனு அளித்தனர்.

தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்துவதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகள் நீக்கப்படாததால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் இருந்து அனைத்துக் கட்சி தலைவர்களும் குரல் கொடுத்துவருகின்றனர். மேலும், ஜல்லிக்கட்டு கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுக்க போராட்டங்கள் வலுத்து வருகிறது. தமிழகம் முழுக்க மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகளும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தடையை மீறி களமிறங்கப் போவதாக அறிவித்துள்ளது.

இதனால் பொங்கல் நாளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் பகுதிகளில் பதட்டம் உருவாகலாம் என்ற சூழல் உருவாகி உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக பிரதமரைச் சந்திக்க அதிமுக எம்.பிக்கள் மனு கொடுத்தனர்.ஏற்கனவே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்த போது அது தொடர்பாக பேச அதிமுக எம்.பிக்கள் சந்திக்க நேரம் கேட்ட போதும் வழங்கப்படவில்லை. இப்போது ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கும் நிலையில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து இன்று காலை வரை அதிமுக எம்.பி.க்களை சந்திக்க நேரம் ஒதுக்கப்படாததால், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் பிரதமர் அலுவலகத்தில் சசிகலா கொடுத்த கோரிக்கை மனுவை வழங்கினர். சசிகலா பிரதமருக்கு எழுதிய கோரிக்கை கடிதத்தில், தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்றும், இதற்காக அவசர சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டதாக தெரியவருகிறது.

முன்னதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர்அனில் மாதவ் தவேவை, தம்பிதுரை தலைமையில் அதிமுக எம்.பி.க்கள் இன்று காலை நேரில் சந்தித்தபோது, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கும்படி வலியுறுத்தினர்.

அதன் பின்னர் மத்திய அமைச்சர் மற்றும் அதிமுக எம்.பி.க்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய மத்திய அமைச்சர், ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருப்பதாகவும், அதன்பிறகே இதுபற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறினார். தம்பிதுரை பேசும்போது “ ஜல்லிக்கட்டு நடத்துவதன் மூலம் தமிழர் கலாச்சாரம் பாதுகாக்கப்படும். வலிமைமிக்க காளைகளை உற்பத்தி செய்து, நாம் கடவுளாக மதிக்கும் காளைக்கு ஜல்லிக்கட்டு என்ற விழாவை எடுக்கிறோம். ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதில்லை. எனவே, ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில் அவசர சட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருக்கிறோம். இந்த ஆண்டே ஜல்லிக்கட்டுக்காக அவசரச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ளோம். நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

சட்டத்திற்கு உட்பட்டு ஜல்லிக்கட்டை நடத்தவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை, அதற்காகவே நாங்கள் டெல்லி வந்தோம். வேறு ஒன்றுமில்லை. பிரதமருக்கு நிறைய அலுவல்கள் இருக்கலாம். அதன் காரணமாக அவர் எங்களை சந்திக்கவில்லை. எங்களை அவர்கள் உதாசீதனப்படுத்தவில்லை” என்றார். ஜல்லிக்கட்டு தொடர்பாக தம்பித்துரை மேலும் பேசும் போது தமிழகம் அமெரிக்காவிலா உள்ளது ? இந்தியாவில்தானே உள்ளது என்று கடுமையாக கூறினார்.