இந்திய பொருளாதாரம் சரியும்! -ஆய்வு

புதன், 11 ஜன 2017

பணமதிப்பழிப்பு நடவடிக்கை காரணமாக நடப்பு 2016-17 நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.3 சதவிகிதமாகக் குறையும் என்று ஹெச்.எஸ்.பி.சி. நிறுவனம் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதம் வெளியான நோட்டுகள் மீதான அறிவிப்பு, நாட்டின் தொழிற்துறையைக் கடுமையாகப் பாதித்தது. இத்தாக்கம் அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் சரிவடையச் செய்தது. இந்நிலையில் தற்போது சிறிது சிறிதாக இயல்பு நிலை திரும்பிவரும் நிலையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் சரிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய புள்ளியியல் அமைப்பு வெளியிட்டிருந்த ஆய்வறிக்கையில் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7.1 சதவிகிதமாக இருக்கும் என்றும், இது கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் அடையும் குறைந்தபட்ச வளர்ச்சி என்றும் தெரிவித்திருந்தது.

ஆனால் இந்த ஆய்வறிக்கையில் அக்டோபர் மாதம் வரையிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டுமே கணக்கீடு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. எனவே நவம்பர் மாதம் பணமதிப்பழிப்பு அறிவிப்பு வெளியான பின்னர் ஏற்பட்ட தாக்கம் குறித்த கணக்கீடுகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் சர்வதேச பங்குச் சந்தை மதிப்பீட்டு ஆய்வு நிறுவனமான ஹெச்.எஸ்.பி.சி., நடப்பு 2016-17 நிதியாண்டின் முடிவில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.3 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என்று கணித்துள்ளது. பணமதிப்பழிப்பு நடைவடிக்கையால் மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிந்ததே இதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.