மாண்டெலஸ் நிறுவனத்துக்கு 88 கோடி அபராதம்!

புதன், 11 ஜன 2017

கேட்பரிஸ் சாக்லெட் தயாரிப்பாளரான, மாண்டெலஸ் நிறுவனம் தனது இந்திய விரிவாக்கத்தில் விதிமீறல்களில் ஈடுபட்டதற்காக ரூ.88.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனமான மாண்டெலஸ், இந்தியாவில் கேட்பரிஸ் பிராண்டு பெயரில் சாக்லெட் மற்றும் பல உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் தனது இந்திய விரிவாக்கத்தில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மாண்டெலஸ் நிறுவனம் இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்துக்கான விரிவாக்கத்தில் அனுமதிக்காக லஞ்சம் வழங்கியதற்காக கடந்த 2009ஆம் ஆண்டு வெளிநாட்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது, சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும், எதிர்காலத்தில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்கவும் ரூ.88.50 கோடி அபராதம் விதிப்பதாக அமெரிக்க பங்கு பரிவர்த்தனை அமைப்பு தீர்ப்பளித்துள்ளது.

மாண்டெலஸ் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர், இந்த உத்தரவை ஏற்றுக் கொள்வதாகவும், அபராதம் செலுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.