மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 11 ஜன 2017

பொது தேர்வு : செய்முறை தேர்வில் மாற்றம் கொண்டு வர திட்டம்!

பொது தேர்வு :   செய்முறை தேர்வில் மாற்றம் கொண்டு வர திட்டம்!

கடந்த மாதம், பிளஸ் 2 பொது தேர்வு மார்ச் 2ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையும் 10ஆம் வகுப்பு பொதுதேர்வு, மார்ச் 8ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரையும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும், 10ஆம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதில் தேர்வுத்துறை முனைப்புக்காட்டி வருகிறது.

இதனால், மார்ச் மாதமே பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளை நடத்தும் அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. மேலும், செய்முறைத் தேர்வில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் காலை, மாலை என இருவேளைகளிலும் பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு வரை செய்முறைத் தேர்வு 24 பேர் கொண்ட குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு ஒரு குழு என்ற வகையில் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு விரைவாக செய்முறைத் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளதால், ஒரு குழுவில் 30 பேர் இடம் பெறும் வகையில் மாற்றங்களை கொண்டு வர தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

செய்முறை தேர்வுகளுக்காக தேர்வு மையங்களையும் அதிகரிக்க ஆலோசனை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 11 ஜன 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon