சென்னை: ரியல் எஸ்டேட் தொழில் பாதிப்பு!

புதன், 11 ஜன 2017

மத்திய அரசின் பணமதிப்பழிப்பு அறிவிப்பால் சென்னை ரியல் எஸ்டேட் தொழிலில் 29 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இதன்மூலம் ரூ.1,100 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

பழைய ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பால் மக்களிடையே பணப்புழக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ரொக்க பரிவர்த்தனையை நம்பியுள்ள பல்வேறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக கிராமப்புற பொருளாதாரம் நலிவடைந்தது. மேலும், ரூபாய் நோட்டு விவகாரத்தால் ரியல் எஸ்டேட் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த 'நைட் பிராங்க் இந்தியா' நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த மூன்று மாதங்களாக சென்னையில் வெறும் 2,321 கட்டிடங்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளன. ஆனால் கடந்த 2015ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 4,299 கட்டிடங்கள் விற்பனையாகியிருந்தன. ஒட்டுமொத்தமாக கடந்த 2016ஆம் ஆண்டு முழுவதும் விற்பனையில் 9 சதவிகித சரிவு ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 2017ஆம் ஆண்டின் முதல் பாதியில் கட்டிடங்கள் விற்பனை இயல்பாகவே இருக்கும். அதன் பிற்பாதியில் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்துள்ளது.