ஈரோடு: ஜவுளி விற்பனை சரிவு!

புதன், 11 ஜன 2017

பணமதிப்பழிப்பு நடவடிக்கையால் உண்டான பண நெருக்கடியில் இயல்பு நிலை திரும்பாததால் ஈரோடு ஜவுளி விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஜவுளித்துறையைப் பொறுத்தவரை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என ஆண்டு இறுதியில் அமோகமான விற்பனை நடக்கும். ஆனால் கடந்த நவம்பர் மாதம் வெளியான பணமதிப்பழிப்பு அறிவிப்பு பல்வேறு சிறு குறு வியாபாரிகளுடன் ஜவுளித் துறையையும் பாதித்துள்ளது. அறிவிப்பு வெளியாகி இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் இயல்பு நிலை திரும்பாததால் தற்போது பொங்கல் பண்டிகைக்கான ஜவுளி விற்பனையும் மந்தமாகியுள்ளது. ஈரோடு ஜவுளி சந்தையில், பொங்கல் சீசனில் வழக்கமாக நடைபெறும் விற்பனையில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே நடந்துள்ளது.

ஈரோடு ஜவுளி சந்தையில் சிறிய, பெரிய தற்காலிக, நிரந்தர கடைகள் என 950க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. வழக்கமாக செவ்வாய்க் கிழமைகளில் சந்தை இயங்கும். எனவே பொங்கல் பண்டிகை காரணமாக கடந்த செவ்வாய் கிழமை விற்பனை பெரிய அளவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற வியாபாரத்தில் 10 சதவிகிதம் மட்டுமே நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

பொதுவாக பொங்கல் பண்டிகையையொட்டி வேட்டி, சட்டை, சேலை, கைலி, துண்டு ஆகியவை அதிகளவில் விற்பனையாகும். ஆனால் நிலவி வரும் பண நெருக்கடியில் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த பொங்கல் சீசனில் ரூ.1 கோடி வரை ஜவுளி விற்பனையானது. தற்போது அதில் 10 சதவிகிதமான 10 லட்சத்துக்கு மட்டுமே நேற்று விற்பனை நடந்துள்ளது. மொத்த வியாபாரிகளின் வரவும் கணிசமாக குறைந்துள்ளது. சில்லறை வியாபாரிகள் மட்டுமே ஜவுளி வாங்கி செல்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களாகவே கடுமையான பாதிப்பிலிருந்த வியாபாரிகள், பொங்கல் விற்பனையை பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில் தற்போதைய விற்பனை சரிவு அவர்களை மேலும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.