ரெட்பஸ் ஆப்: பயணிகள் அதே பேருந்துகளில் பயணிக்கலாம்!

புதன், 11 ஜன 2017

ரெட்பஸ் ஆப் மற்றும் இணையதளம் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்கள் அதே பேருந்துகளில் பயணிக்கலாம் என ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னை உட்பட பிற பகுதிகளுக்கும் வெளிமாநிலங்களுக்கும் செல்ல ஆம்னி பேருந்துகளுக்கான பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு, ரெட்பஸ் நிறுவனம் இயக்கி வரும் ரெட்பஸ் என்ற மொபைல் ஆப் அல்லது இணையதளம் வழியாக முன்பதிவு செய்துக் கொள்ளும் வசதியுள்ளது.

இந்நிலையில் பொங்கலுக்காக இந்த ஆப் மூலம் பயணச்சீட்டுகள் முன்பதிவு செய்தவர்களை,பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் நேற்று தெரிவித்திருந்தது.

பொங்கல் பண்டிகைக்கு 12-ம் தேதி முதல் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துள்ளனர். அதேபோல் 15ம் தேதிகளில் இருந்து சென்னை திரும்புவதற்கும் சுமார் 2 லட்சம் பேர் இந்த ஆப் மூலம் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், ரெட்பஸ் ஆப் மூலம் ஜனவரி 12ம் தேதி முதல் 17ம் தேதி வரை முன்பதிவு செய்த பயணச்சீட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. ரெட் பஸ் நிறுவனத்தினர் ஒப்பந்தத்தை மீறி கூடுதல் கட்டணத்திற்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தனர். இதுகுறித்து, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து, 15 நாட்கள் அவகாசம் கொடுத்தோம். இருப்பினும் ரெட் பஸ் நிறுவனம் எங்களுக்கு எந்தவித பதிலும் அளிக்கவில்லை. எனவே, ’ரெட் பஸ்’ மொபைல் ஆப் மூலம் பயணச்சீட்டு முன்பதிவு செய்தவர்களை எங்கள் பேருந்துகளில் பயணிக்க அனுமதிக்கமாட்டோம் என்று ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்திருந்தது. முன்பதிவு செய்தவர்கள் அதற்கான கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டது.

பொங்கலுக்கு ஊர்களுக்கு செல்ல ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு முன் பதிவு செய்தவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ரெட்பஸ் மூலம் முன்பதிவு செய்தவர்கள் அதே பேருந்துகளில் பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்னி பேருந்துகளின் சில நிறுவனங்களிடையே ஏற்பட்ட பிரச்சனைகளால் இந்த தவறான தகவல் பரப்பபட்டது. இதையடுத்து உடனடியாக நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம், நீங்கள் பயணசீட்டுகளை ரத்துசெய்ய வேண்டாம் என்றும், உரிய தேதிகளில், முன்பதிவு செய்த பேருந்துகளில் பயணம் செய்யலாம் என்றும் தகவல் அனுப்பப்பட்டது என்று ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகி தெரிவித்துள்ளார்.